தமிழக அரசியலில் புதுமுகமாக களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல்முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியில் பங்கு எனக் கூறியும் இதுவரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. இதையடுத்து, தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதனிடையே விஜய் நடித்த ’ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது மற்றும் கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை என மத்திய அரசு அவருக்கு அழுத்தம் தந்து கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டது.

அதேநேரத்தில், திமுக போட்டியாகக் கருதப்படும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி கூறியுள்ள நிலையில், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெகவும் தெரிவித்துள்ளது. ஆனால் கடைசிவரை வெளியான தகவலின் படி தவெக உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 80 தொகுதிகள், ஆட்சியில் பங்கு முதலிய ஆஃபர்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தசூழலில் தவெக தரப்பில் மறுப்பு சொல்லப்பட்ட நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேரம் பேசப்பட்டதாக பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
