இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் அவர் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுடன் தலையில் தையல் போடப்பட்டு,

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வயது மூப்பு காரணமாக அவ்வப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், திடீர் மூச்சுத் திணறல் காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதி இரவு, நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் வேறு உடல்நலப் பிரச்னைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாகச் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (பிப்.25) காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
