இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது ’ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ என்ற பெயரில் இன்று காலை சரமாரியாகத் தாக்குலைத் தொடங்கிய நிலையில், ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வளைகுடா முழுவதும் உள்ள பல அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கி வருகின்றன.

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அதையொட்டி, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே ஈரானுக்கு அமெரிக்கா காலக்கெடுவும் விதித்திருந்தது. ஆனாலும், அதை ஈரான் கண்டுகொள்ளவில்லை. அதேநேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் குவித்தது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் உலகம் முழுவதும் நிலவியது.

இந்த நிலையில், இன்று காலை இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது ’ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ என்ற பெயரில் சரமாரியாகத் தாக்குலைத் தொடங்கின. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 30 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக, ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி கமேனியின் வீடு மற்றும் அலுவலகம், உளவுத்துறை தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பதற்றம் நீடித்து வருவதால் அலி கமேனி சுரங்கத்தில் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்கும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வளைகுடா முழுவதும் உள்ள பல அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியுள்ளன. அவற்றில் அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா விமானத் தளம், பஹ்ரைனின் ஜுஃபைர் பகுதியில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படையின் சேவை மையம், கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளம் மற்றும் குவைத்தில் உள்ள அல் சேலம் விமானத் தளம் ஆகியவை அடங்கும். தவிர, இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களையும் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *