சென்னை உயர்நீதிமன்றம், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக 3 மாதங்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் அவதூறான வீடியோக்களை பதிவிட்டு ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், காவல்துறை வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள், ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்து, சவுக்கு சங்கரின் உடல் பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர்.
மிரட்டி பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலமாக 3 மாதங்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.


இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வாங்கிவிட்டு, தொடர்ந்து அவதூறான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஜாமீன் நிபந்தனைகளை மீறி செயல்படுவதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு, இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கவோ? பத்திரிக்கை மற்றும் சமூக வளைதளங்களில் பேசி வீடியோ வெளியிடவோ? கூடாது என கூடுதல் நிபந்தனைகளை விதித்ததுடன், மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர். மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தலைவர் தலைமையிலான குழு அமைத்து, சவுக்கு சங்கரை பிப் 02ம் தேதி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை அறிக்கையை பிப் 03ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னையும் இந்த வழக்கில் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும். யாரையும் சந்திக்க கூடாது. வழக்கு தொடர்பாக யாரிடமும் பேச கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு தரப்பில், ஏற்கனவே நீதிபதியை மாற்றம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சவுக்கு சங்கரின் இந்த மனுவை ஏற்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு எதிராக கருத்து பேசி அவரை பெரிய ஆளாக்க தான் விரும்பவில்லை. யாரையும் குற்றம் சொல்வதற்காக இங்கு வரவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், சவுக்கு சங்கரின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 9ம் தேதி ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *