தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 74 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்களுக்கான 2 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், 21 பள்ளிகளுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 25 கிராம அறிவுசார் மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், 10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக
நல்லிணக்கத்திற்கான கிராம ஊராட்சி விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட மானியம், என மொத்தம் 265.50 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9371 பயனாளிகளுக்கு வழங்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தல்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், திருச்சிராப்பள்ளி – ராஜா காலனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 25.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்களுக்கான 2 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள்;விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர், கரூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் மயிலாடுதுறை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 பள்ளிகளுக்கு 25.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் இதர கூடுதல் கட்டடங்கள்;விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கரூர், தருமபுரி, சேலம், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 23.44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 கிராம அறிவு சார் மையங்கள்; என மொத்தம் 74.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது, நலத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முக ஆதரவு கட்டமைப்பு மூலம் தீவிர வறுமையில் வாடும் குடும்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும். இத்திட்டத்தின் மூலம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அக்குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, தொழில் கடன், வங்கிக் கடன், சுயஉதவிக் குழுக்களில் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் தேவைகளின் அடிப்படையில் முதற்கட்டமாக 1,00,000 பயனாளிகளுக்கு நலிவு நிலை குறைப்பு நிதியாக ரூ.75 கோடி வழங்கப்படுகிறது. அதன்படி, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் 505 பயனாளிகளுக்கு அவர்களின் தேவையின் அடிப்படையிலான திட்ட பயன்கள் மற்றும் நலிவு நிலை குறைப்பு நிதியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது சாதி வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதுகளையும், அதன் வளர்ச்சி பணிக்காக தலா ரூ.1 கோடி வழங்கும் திட்டத்தின் கீழ், 2025 – 26 ஆம் நிதியாண்டில் இராமநாதபுரம் மாவட்டம் – மேலமடை, விழுப்புரம் மாவட்டம் – பரையந்தாங்கல், தென்காசி மாவட்டம் – கே.ஆலங்குளம், கலிங்கப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் – சூரியனார்கோவில் மற்றும் வெங்கடசமுத்திரம், சேலம் மாவட்டம் – மணிவிழுந்தான், செங்கல்பட்டு மாவட்டம் – மண்ணிவாக்கம், கோயம்புத்தூர் மாவட்டம் – ஒட்டர்பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்- தேவூர் ஆகிய 10 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருதுகள் மற்றும் வளர்ச்சிப் பணிக்காக 10 கோடி ரூபாய் நிதியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
