சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன்மலை கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (45). இவர் திமுகவில் கிளை கழகச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது மனைவி சரிதா உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ராஜமாணிக்கம் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார்.

இதுகுறித்து மனைவி சரிதா அளித்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரியக்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரனுக்கும் அவரது உறவினரான ராஜமாணிக்கம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்ததாகவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள ராஜமாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கருமந்துறை காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
செய்திகள் : மா.அருள்நேரு தலைமை செய்தியாளர் தமிழ்நாடு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *