தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் மதுரை மாநாடு குறித்து இரண்டாவது கடிதத்தை தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், கட்சித் தொண்டர்களுக்கான சில முக்கியமான அறிவுறுத்தல்களையும், தனது அரசியல் இலக்கு குறித்த நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் தனது அறிக்கையில், “மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1967 மற்றும் 1977 தேர்தல்களில் ஏற்பட்ட திருப்புமுனை வெற்றி, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நிகழப் போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த இலக்கை எட்டுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன என்றும், மாபெரும் மக்கள் சக்தியான தொண்டர்கள் அதை நிரூபிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு சில முக்கியமான வேண்டுகோள்களையும் விஜய் வைத்துள்ளார். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மாநாட்டிற்கு வருவதைத் தவிர்த்து, வீட்டிலிருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு முடிந்த பிறகு வீடு திரும்பும்போதும், அனைத்துத் தொண்டர்களும் “ராணுவக் கட்டுப்பாட்டுடன்” ஒழுங்கையும், பாதுகாப்பையும் கடைப்பிடிக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொறுப்பான மற்றும் தகுதிவாய்ந்த அரசியல் இயக்கம் என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *