ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமைதி, தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தி வெண் புறாக்கள், மூவர்ண பலூன்கள் பறக்க விட்டார். அதன் பின்  சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். 

இதனை தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.84.29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த அலுவலர்கள், பணியாளர்கள் 229 பேருக்கு பாராட்டு சான்றிதழும், தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், போலீசார் 74 பேருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், டிஆர்ஓ கோவிந்தராஜூலு மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, கோட்டாட்சியர் ராஜமனோகரன், உதவி எஸ்பிக்கள் குணாள் உத்தம் ஷரோத், மீரா உள்பட பலர் பங்கேற்றனர்.

தேசியக்கொடி வடிவில் வெட்டப்பட்ட கேக்கால் சர்ச்சை..
முன்னதாக ஆயுதப்படை மைதானத்தில் வைத்து கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சி சிம்ரன் ஜி சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர்,16 ஆடி நீளம், அகலம் 3.25 அடி அகலம் கொண்ட 79 கிலோ எடை கொண்ட தேசிய கொடியின் மூவர்ண வண்ணத்திலான கேக்கை இணைந்து வெட்டி பொது மக்களுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் வழங்கினர்.
தேசியக்கொடி போன்ற மூவர்ணம் மற்றும் அசோகச் சக்கரத்துடன் தயார் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *