தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம், அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவையும் ஏற்படுத்தி செயல்பட்டு வந்தார். அதேசமயம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், சசிகலா உள்ளிட்டோர் தனிகட்சி தொடங்கிவிட்ட நிலையில், சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்து விட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த சூழலில் தான், ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் அவரிடம் இருந்து விலகி பல்வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர்.

ஓ.பி.எஸ்-ஐ அதிமுகவுடன் இணைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஓ.பி.எஸ் திமுக அல்லது விஜய் தலைமையிலான தவெகவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 முறை அதிமுக சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் எதிரும் புதிருமான திமுகவுடன் இணைய மாட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் தான் இன்று காலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற ஓ. பன்னீர் செல்வம் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினைச் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, ஓ. பன்னீர் செல்வத்தை திமுக கரைத்துண்டு அணிவித்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது, இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். மேலும், ஓ. பன்னீர் செல்வத்துடன் அவரது மகன் ரவீந்தரநாத்-தும், உசிலம்பட்டி ஐயப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், அதிமுகவின் சார்பாக தமிழக முதல்வராக பன்னீர் செல்வம் இருந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவில் தற்போது இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *