தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.12.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டம் விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, ஆற்றிய உரை:-நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து மூன்று மணிநேரம் ஆகியிருக்கிறது. இங்கே பேசிய எல்லோருடைய பேச்சை கேட்டேன் என்று சொல்வதைவிட, நெஞ்சை உருக்குகின்ற, தன்னம்பிக்கையையும், புது நம்பிக்கையையும் கொடுக்கும் உங்களின் கதைகளை, பேச்சை கேட்டு, மகிழ்ச்சியில் என்று சொல்வதை விட, நெகிழ்ச்சியில் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்! உள்ளத்திலிருந்து பேசிய உங்களுக்கும் – உற்சாகமாக கைத்தட்டல்களை வழங்கிய சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றி! நன்றி! நன்றி!என்னுடைய நன்றி என்பது, இந்தக் கடமையை சிறப்பாக, இன்னும் சிறப்பாக ஆற்ற வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு! இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இரண்டு பேரை அழைத்திருந்தோம். ஒருவர் மரியாதைக்குரிய அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள்; தன்னுடைய 100 வயதில் நிறைவாழ்க்கை வாழ்ந்து, பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். மிகவும் பொருத்தமானவர்;

மற்றொருவர் இளம் வெற்றியாளர் சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள். எவ்வளவு சிறப்பாக பேசினார்கள். விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல; அரசியல் துறைக்கும் வந்தாலும், இவர்கள் தான் நம்பர்-1-ஆக இருப்பார்கள். இந்த வயதில், அனைத்து சவால்களையும் வென்று, சாதனை செய்திருக்கிறார்; அவரும் மிகவும் பொருத்தமானவர். இவர்களை விட சிறப்பான விருந்தினர்கள் யாரும் இருக்கவே முடியாது.நாம் வாழும் சமூகம் – சாதி – மத – இன – மொழி – பாலின பாகுபாடு இல்லாமல், “எல்லாருக்கும் எல்லாம்” என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம்! அதனால்தான், 2021 மே 7-ஆம் நாள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடனே, “நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு” என்று சொல்லி, ஏராளமான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினேன். நம்முடைய இலட்சியப் பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான்

“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”! இந்த திட்டத்தை அறிவிக்கும்போதே, தெளிவாக சொல்லிவிட்டோம் – இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! திட்டங்கள் என்பது, கொள்கைகளின் சிந்தனைகளின் செயல்வடிவம்! ஒரு திட்டத்தின் வெற்றி என்பது, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மட்டுமல்ல; அந்தத் திட்டத்தை பொதுமக்கள் எந்தளவுக்கு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, தங்களின் வாழ்க்கைத்தரத்தை, சமூக நிலையை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான், அந்த திட்டத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது! அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது! பெரும்பாலும், மாநிலத்தில் இருக்கின்ற மகளிர் ”மாதம் ஆயிரம் ரூபாயை பெறுகிறார்கள்; விடியல் பயணத்தில், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் மீதமாகிறது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அந்த வகையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது. இப்படி திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களை முதலீடாக மாற்றி, தங்களின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்த்திக்கொள்கிறார்கள். இதைதான், இந்தத் திட்டத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன். இது நேரடியான பலன்கள் என்றால், கையில் காசு இருப்பதால் பெண்களுக்கு கூடும் சமூக மதிப்பு – அந்த பணத்தால், சத்தான காய்கறிகளை வாங்குவது – குழந்தைகளுக்கான கல்விக்கு செலவிடுவது என்று வாழ்க்கைத்தரம் உயரவும், மறைமுகமாகவும் இது உதவிக்கொண்டு இருக்கிறது! இங்கு பேசியதை எல்லோரும் கேட்டீர்கள் – கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் – நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம் – விடியல் பயணம் – மக்களைத் தேடி மருத்துவம் – சுய உதவிக் குழுக்கள் – வெற்றி நிச்சயம் – நலம் காக்கும் ஸ்டாலின் – பெண் தொழில் முனைவோர் – விளையாட்டு – தோழி விடுதிகள் என்று நம்முடைய திராவிட மாடல் அரசின் எண்ணற்ற திட்டங்களால் பயனடைந்த “வெல்லும் தமிழ்ப் பெண்களாக” அவர்களின் வெற்றிக்கதைகளை சொல்லும்போது, திராவிட இயக்கத்தின் தொண்டனாக, எனக்கு அளவில்லாத பெருமை உண்டாகியிருக்கிறது!

இந்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை மாநிலங்கள்கூட இந்தத் திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்! இன்னும் சொல்கிறேன்… மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *