நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, “நம்முடைய இளைஞரணி நடத்திய முற்போக்குப் புத்தகக் காட்சியில் முழுக்க முழுக்க அரசியல் புத்தகங்களை மக்கள் பார்வையிட்டு வாங்கியிருக்கிறார்கள். கடந்த 9 நாட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்து, ரூ.35 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர். குறிப்பாக, காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகம் 1,500 படிகள் விற்பனையாகியுள்ளன. முன்பதிவு திட்டத்தில் 7,000 படிகள் விற்றுள்ளன.

பொதுவாக, வள்ளுவர் கோட்டம் என்றால் ராசி இல்லாத இடம் என்பார்கள். அறிவுத்திருவிழா நடத்த நான் இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அறிவுத்திருவிழாவிற்கும் ராசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நினைப்பவன் நான்.தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு, கலைஞர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள தேர்வு செய்த இடம் வள்ளுவர் கோட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைபோல், ஆண்டுதோறும் வெவ்வேறு மாவட்டங்களில் அறிவுத்திருவிழா மேற்கொள்ள கழக இளைஞரணி சார்பில் ஈடுபடுவோம் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
