
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தூங்கிய ஓட்டுநர்கள் இருவரை தாக்கி விட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் செல்போனை பிடுங்கிச் சென்றது. அதேபோல், எம்.புதூர் பகுதியில் நடந்து சென்ற நபரை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தூக்கத்தையும் களைத்தது.
இதையடுத்து காவல்துறை பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது, கடலூரில் இருந்து புதுவை நோக்கி சென்ற இரண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அதில் இருந்த ஆறு பேர் தப்பியோடினர். இதில், சிலர் காவல் துறையால் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து எம்.புதூர் என்ற இடத்தில் புதரில் மறைந்திருந்த விஜி என்ற நபரை கைது செய்ய போலீசார் முயன்றனர்.

அப்போது விஜி கையில் வைத்திருந்த ஆயுதத்தால் கோபி மற்றும் கணபதி ஆகிய இரண்டு காவலர்களை கடுமையாக தாக்கி விட்டு ஆய்வாளர் சந்திரனை தாக்க முயற்சித்த போது, ஆய்வாளர் சந்திரன் பாதுகாப்புக்காக தனது கை துப்பாக்கியால் சுட்டதில் விஜி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை காப்பாற்றும் நோக்கில் தனது வாகனத்தில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விஜியை தூக்கி வந்துள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அடிபட்ட காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அதன் பிறகு சம்பவம் நடந்த எம்.புதூர் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார் வழிப்பறியில் ஈடுபட்ட விஜி ஆகாஷ் ஆகி மூன்று பேர் கடந்த வாரம் வேப்பூரில் பெண்ணிடம் வழிப்பறி செய்துவிட்டு மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த காட்சி தற்போது காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.